ஊமைத்துரை

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர் புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மாவீரர் கோபால நாயக்கரின் உதவியால் 1801ல் அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார்.

வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோர் அடங்கிய ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்தபின், மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.

ஊமைத்துரை நட்புணர்வும், மனிதாபிமானமும் கொண்டிருந்தவர் என்று வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன், தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத் தகராறு காரணமாக பகையாளியாகக் கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்கள் அனைவரிடத்தும் நட்போடு பழகி வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை, அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது.