கப்பற்படைக் கமாண்டர்களின் தளபதிகளின் 2021ம் ஆண்டுக்கான இரண்டாவது மாநாடு டெல்லியில் இன்று முதல் 22 வரை நடைபெற உள்ளது. ராணுவ உத்திகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கடல்சார்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் அரசின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் கப்பற்படைக் கமாண்டர்களுக்கு இம்மாநாடு வாய்ப்பாக அமைகிறது. தற்போது சீன பிரச்சனை, இலங்கையில் சீன ஆதிக்கம், போதை மருந்து கடத்தல் விவகாரம், ஆப்கன் சூழல், குவாட் கூட்டமைப்பின் செயல்பாடுகள் உள்ளிட்ட விரைவாக மாறி வரும் நிலைமைகள் காரணமாக, இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இம்மாநாட்டில் தேசப் பாதுகாப்பு குறித்து கப்பற்படைக் கமாண்டர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடுவார். மேலும், ராணுவத் தலைமை தளபதி, தரைப்படைத் தளபதிகள், விமானப்படைத் தளபதி ஆகியோரும் செயல்பாட்டுச்சூழல், முப்படைகளின் ஆற்றலை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்து கப்பற்படைக் கமாண்டர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.