மின்வெட்டு கிடையாது

நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றில் போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லை என செய்திகள் வெளியாகின. அதனால் மின்தடையை சந்திக்க நேரிடும் என, தமிழகம், டில்லி, ஆந்திரா உட்பட பல மாநிலங்கள் கூறியுள்ளன. இதனை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. இதனையடுத்து மத்திய நிலக்கரி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு தேவையான 72 லட்சம் டன் நிலக்கரி உள்ளது. மேலும், இந்திய நிலக்கரி நிறுவனத்திடம், 24 நாட்களுக்கு தேவையான, 400 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அவை அனல்மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நிலக்கரிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. அதனால், மின்தடை ஏற்படும் என்பது தவறான வாதம்’ என கூறியுள்ளது. ‘கொரோனா பாதிப்பில் இருந்து தொழில்துறை மீண்டு வருவதால் மின் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 24 சதவீதம் உயர்ந்துள்ளது. பருவமழை காரணமாக நிலக்கரி வினியோகத்தில் சற்று பாதிப்பு உள்ளது. ஆனால் தட்டுப்பாடு இல்லை. போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால், மின்தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை’ என மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.