சுற்றுச்சூழல் ஆஸ்கார்

உலகம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் கண்டுபிடிப்புகளை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இப்பரிசு, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது என்று அழைக்கப்படுகிறது. இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 கோடி) பரிசாக வழங்கப்படும். இவ்வாண்டுக்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டிக்கு 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இப்பட்டியலில் பாரதத்தில் இருந்து இருவர் இடம்பிடித்து உள்ளனர். இதில் ரூ. 40 ஆயிரம் செலவில் சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவியும் ஒருவர். வினிஷா உமாசங்கர் இந்த கண்டுபிடிப்பிற்காக ஏற்கனவே தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார். இறுதி போட்டி லண்டனின் அலெக்சாண்டிரா மாளிகையில் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படைப்பாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.