ஜெ.பி என்றும் மக்கள் நாயகன் என்றும் அன்புடன் அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயண், சுதந்திர பாரதத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஜனநாயகத் தேர்தல் அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்கள் தோன்றி மறைந்தாலும், மக்களை அதிகம் ஈர்க்கக்கூடிய தலைவர்கள் மிகவும் குறைவு. அதுவும் தேர்தலை சந்திக்காமல் மக்களை அதிகம் ஈர்த்தவர்கள் அரிதானோர் மட்டுமே. அந்த வரிசையில் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு. இறுதிவரை மக்களுக்காக மட்டுமே உழைத்தவர் இவர்.
பீகார் மாநிலத்தில் பிறந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், அமெரிக்காவில் தங்கி உயர்கல்வி பயின்றார். பிறகு ஏழு ஆண்டுக்கால அமெரிக்க வாசம். 1929ல் பாரதம் திரும்பினார். காந்தியின் அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டதன் மூலம் பொதுவாழ்வில் நுழைந்தார் ஜெ.பி.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பித்த ஜெ.பியின் தலைக்கு, ஆங்கிலேய அரசு ரூ. 10 ஆயிரம் விலை வைத்தது. 1943ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 16 மாதங்கள் தனிமைச் சிறையில் சித்ரவதைகளை அனுபவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் நேரு பலமுறை கேட்டுக்கொண்டும் அமைச்சரவையில் சேர மறுத்தார். வினோபா பாவேயின் அழைப்பை ஏற்று பூமிதான இயக்கத்திற்காக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். நேருவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு வந்த பிரதமர் நாற்காலியையும் மறுத்தார். நெருக்கடி நிலை காலத்தில் இந்திராகாந்தியால் சிறையில் அடைக்கப்பட்டார். சில காலம் பொது வாழ்விலிருந்து விலகியிருந்த ஜெ.பி, 1970களில் உருவான வேலைவாய்ப்பின்மை, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முதன்மையானவராகத் திகழ்ந்தார்.
நெருக்கடி நிலைக்குப் பிறகான பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றினார். எந்த காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக காந்தி, நேருவுடன் இணைந்து உழைத்தாரோ, அதே காங்கிரஸ் கட்சியின் முதல் தோல்விக்கு வித்திட்டார் ஜெ.பி. 1977 பொதுத்தேர்தலை, “அடுத்த 25 ஆண்டுகளுக்கான பாரதத்தை தீர்மானிக்கப்போகும் தேர்தல்” என்று குறிப்பிட்டார். எமர்ஜென்சிக்குப் பிறகு தேர்தலில், காங்கிரஸ் தோற்று ஜனதா கட்சி வெற்றிபெற்றபோதும் பிரதமர் நாற்காலியை ஏற்காமல் மறுத்தார் ஜெ.பி.