மாமல்லபுரத்தில் கடந்த 2013ல், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, மரக்காணம் அருகே கலவரம் ஏற்பட்டது. இதில், போக்குவரத்து கழகத்தின் 58 பேருந்துகள் சேதம் அடைந்தன. இந்த இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை ரத்து செய்யக் கோரி ஜி.கே மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி பொது சொத்துக்களுக்கு சேதம், நிதி இழப்பு ஏற்படுத்துவது போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை உள்ளது. அக்கட்சியினர் விடுதலை செய்யப்பட்டாலும், அரசு, இழப்பீடு தொகையை வசூலிக்கத் தடை இல்லை. இதற்கு பா.ம.க உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நோட்டீசை ரத்து செய்ய முடியாது. விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் சமூகக் கடமையை உணர வேண்டும். போராட்டங்களில் ஒழுக்கம் தேவை. இச்சட்டம் 29 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தும் திறமையாக அமல்படுத்தப்படவில்லை. இனி வரும் காலங்களில் கடுமையாக அமல்படுத்த வேண்டும். தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரே இதுபோன்று செய்தாலும் நடவடிக்கை தேவை’ என தெரிவித்தனர்.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள தி.மு.கவின் பாதையே வன்முறை பாதைதான் என்பது வரலாறு. மதுரையில் இந்திரா காந்தி மீது கல்வீசி ரத்தம் சொட்ட சொட்ட அடித்தது, முதல் சமீபத்தில் அம்மா உணவகத்தை சேதப்படுத்தியது அண்ணாவின் மறைவிற்கு பின்பு தி.மு.க எடுத்த பாதையே வன்முறை பாதைதான். கருணாநிதி கைதின்போது வன்முறை, பா.ஜ.க அலுவலகம் மீதான தாக்குதல், நடிகை குஷ்பு வீட்டில் கல் எறிந்தது, உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகள் என பல உதாரணங்கள் இதற்க்குண்டு. எவ்வித பாரபட்சமும் இன்றி அந்த வழக்குகளிலும் உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யுமா?