பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜத்தை பின்பற்றுபவர். அது பகத்சிங்கின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல சீக்கியர்களைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப் பள்ளிக்கு செல்லவில்லை. ஆர்ய சமாஜின் பள்ளியான ஆங்கிலோ வேதிக் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
1919ல், பன்னிரெண்டு வயதாகும்போது, ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார் பகத் சிங். தனது 14ம் வயதில் இளைய புரட்சி இயக்கத்தில் இணைந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி ஆங்கிலேயரை பாரதத்தில் இருந்து விரட்ட முயன்றார். வாழ்க்கையை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்க இல்லற வாழ்க்கை சரிவராது என்று கூறி திருமணம் செய்ய மறுத்து கடிதம் எழுதிவைத்து விட்டு கான்பூருக்கு சென்றார்.
சைமன் குழு லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய், அகிம்சை வழியில் அமைதியான ஊர்வலம் நடத்தினார். ஆனால் காவல் அதிகாரி ஸ்காட், தடியடி நடத்த ஆணையிட்டதோடு தானே சென்று லாலா லஜபதி ராயை தாக்கினார். இதனால், ராய் மருத்துவமனையில் காலமானார். பகத்சிங் இச்சம்பவதிற்கு பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான ராஜ்குரு, சுக்தேவ், சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் சேர்ந்து ஸ்காட்டைக் கொல்ல திட்டமிட்டார். ஆனால் தவறுதலாக துணை காவல் அதிகாரி சாண்டர்ஸை அவர்கள் கொன்றனர்.
பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக தப்பிச் சென்றபோது, தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சித்தார். சந்திரசேகர ஆசாத் சனன் சிங்கைச் சுட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பகத்சிங்கின் தூக்குத் தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத் தண்டனையை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி தூக்குத் தண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற கருத்து அக்காலத்தில் மக்களால் பேசப்பட்டது.