‘நீலக் கொடி’ சான்றிதழ் பெற்ற கடற்கரைகள் உலகின் தூய்மையான கடற்கரைகளாகக் கருதப்படுகின்றன. டென்மார்க்கை சேர்ந்த சர்வதேச தொண்டு அமைப்பான சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை அமைப்பின் சர்வதேச நடுவர்குழு, இந்த ‘நீலக்கொடி’ சான்றிதழ்களை வழங்குகிறது. இதுவரை நமது குஜராத்தின் சிவராஜ்பூர், டையூவின் கோக்லா, கர்நாடகாவின் படுபித்ரி, கேரளாவின் கப்பாட், காசர்கோடு, ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசாவின் கோல்டன் கடற்கரை, அந்தமான் நிகோபரின் ராதாநகர் ஆகிய எட்டு கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் இவ்வருடம் தமிழகத்தில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் ஆகிய இரண்டு கடற்கரைகளும் நீலக்கொடி சான்றிதழை பெற உள்ளன. இதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டுவிட்டரில், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான, பசுமையான பாரதத்தை நோக்கிய நமது பயணத்தின் இது மற்றொரு மைல்கல்’ என தெரிவித்துள்ளார்.