நீதிபதி தகுதி அஹோபில மடம் பரிந்துரை

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான தகுதி அளவுகோல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக 617 ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற அஹோபில மடம் சில முக்கிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில், ‘1962ல் ஹிந்து அறநிலையத்துறை சட்டத்தை வடிவமைத்த சட்ட வல்லுநர் சி.பி. ராமசாமி ஐயர் தலைமையிலான குழு,  நீதிபதிகளின் அறிவை ஆராய்வதற்கு புகழ்பெற்ற, மதம் சம்பந்தப்பட்ட அறிவுள்ள வரலாற்றாசிரியர்களால் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

ஹிந்து மத சுதந்திரம் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களின் அடுத்தடுத்த தீர்ப்புகளால் நீர்த்துப் போயுள்ளது. பல்வேறு ஹிந்து மத நடைமுறைகள் குறித்த நீதிபதிகளின் அறியாமையும் தவறான தீர்ப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம். இதனால், ஹிந்துக்களின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மீறி அவர்களின் மத நடைமுறைகளை சீர்திருத்துகிறோம், ஒழுங்குபடுத்துகிறோம் என கூறி மாநில அரசுகள் செய்யும் அத்து மீறல்களை நீதிமன்றங்கள் தங்களை அறியாமலேயே ஊக்குவிக்கின்றன.

நிதி முறைகேடுகளை ஒழுங்குபடுத்தும் போர்வையில், ஹிந்து மத அமைப்புகளுக்கும் அதை கடைபிடிப்பவர்களுக்கும் கடுமையான அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஹிந்து மத விஷயங்கள், கோயில் சொத்துக்களை மாநில அரசு மொத்தமாக கட்டுப்படுத்துகிறது. அது மத நடைமுறைகளை செயல்படுத்தவும் முறைப்படுத்தவும் பிரச்சாரம் செய்யவும் பிரிவு 25ன் கீழ் தரப்பட்டு உள்ள ஹிந்துக்களின் அரசியலமைப்பு உரிமையை பாதிக்கிறது’ என தெரிவித்துள்ளது.