அன்னி பெசண்ட் அம்மையார்

ஒரு சாதாரண  குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தனது 19வது வயதில் 1867ம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்பவரை மணந்தார். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவரிடம் இருந்து 1873ல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.

பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதினார். சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார்.. ‘லிங்க்’ என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி பாரதம், அயர்லாந்து விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். The Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் சந்தித்தார். இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திகவாதத்தை கைவிட்டு ஆத்திகரானார்.

பிளேவட்ஸ்கியின் பிரம்ம ஞானசங்கத்தில் உறுப்பினரானார். மார்க்சியவாதிகளுடன் தனது உறவுகளைத் துண்டித்தார். 1891ல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரம்ம ஞான சங்கத்தில் முக்கிய பொறுப்பாளரானார். 1893ல் முதல் முறையாக பாரதம் வந்தார். அடையாறில் பிரம்ம ஞானசங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். ஹிந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார். பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு ஹிந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். பாரத கலாச்சார உடை தரித்து ஹிந்துவாகவே வாழலானார்.

பாரதத்தில் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக ‘காமன் வீல்’ என்ற வாரப் பத்திரிகை, நியு இந்தியா என்ற நாளேடு ஆரம்பித்தார். 190ல் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். டிசம்பர் 191ல் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வானார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் தேச விடுதலையில் ஈடுபாடு காட்டி வந்தார். தனது 87ம் வயதில் செப்டம்பர் 20ல் சென்னை அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அன்னி பெசண்ட் அமைத்த அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.