கோவாக்ஸின் ஒப்புதல் தாமதம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் அக்டோபர் 5 வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பை சேர்ந்த தடுப்பூசி நிபுணர்களின் உயர்மட்ட ஆலோசனைக் குழு (SAGE) கோவாக்சின் தடுப்பூசியின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை தற்போது பகுப்பாய்வு செய்து வருகிறது. இதற்கான அங்கீகாரத்தை வழங்குவது குறித்து முடிவு செய்ய அக்டோபர் 5 ஆம் தேதி கூடுகிறது என கூறப்பட்டுள்ளது. கோவாக்ஸின் தான் பாரதத்தில் முதன்முதலாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் பாரத் பயோடெக் இணைந்து இதனை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.