அமெரிக்காவில் பயங்கரவாதிகள்

அமெரிக்காவில் செயல்படும், காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் குறித்து, ஹட்சன் மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘பாரதத்தில், பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி காலிஸ்தான் நாடாக அறிவிக்கக் கோரும் அமைப்புகளும், காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களும் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் உதவிகள் செய்து வருகிறது. கனடா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் பாரதத்திற்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தாங்கள் வாழும் நாடுகளில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பாரதம் பல முறை அமெரிக்காவிடம் புகார் தெரிவித்தும், அமெரிக்க அரசு இதைப்போன்ற பிரிவினைவாத அமைப்புகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகலையும் எடுக்கவில்லை. அமெரிக்கா, அவர்களை கட்டுப்படுத்த, முன்னுரிமை அளிக்க வேண்டும். தவறினால், வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது. அமெரிக்க அரசு, காலிஸ்தான், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லை எனில், மிகப் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள், உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது’ என கூறப்பட்டுள்ளது.