உலகலாவிய தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல், அமெரிக்காவில் கொடிய கொரோனா தொற்றுநோய் காலங்களில் சமூகத்திற்கு மகத்தான சேவை செய்துள்ளது. மருத்துவக் கருவிகள், தடுப்பூசிகள், ஏழைகளுக்கு படுக்கைகள், உணவு வழங்குவது போன்ற சேவைகள் சேவ தொண்டர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. இன்றும்கூட, சேவா இன்டர்நேஷனல் அங்கு பலவிதமான சுகாதார விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
சேவா இன்டர்நேஷனல் அமைப்பின் கொரோனா கால சீரிய சேவைகளைப் பாராட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஒரு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சேவா இண்டர்நேஷனலின் சேவையை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
‘கடந்த ஆண்டு அமெரிக்க வரலாற்றில் மிகவும் வேதனையான வருடங்களில் ஒன்று. கொரோனா காரணமாக 6,28,000க்கும் அதிகமான அமெரிக்க உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்கள் தடுப்பூசி போட உதவுவது உள்ளிட்ட உங்கள் முயற்சிகள் உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உதவுகின்றன. முன் எப்போதையும் விட எங்களுக்கு உங்கள் தொடர் ஆதரவு தேவை. ஒரு தேசமாக ஒன்றிணைந்து, நாம் இந்த தொற்றுநோயை கடந்து, ஆரோக்கியமான, பயனுள்ள எதிர்காலத்தை உருவாக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.
சேவா இன்டர்நேஷனல் அமைப்பு தனது டுவிட்டர் பதிவில், அதிபர் ஜோ பிடன், தங்களது சேவை முயற்சிகளை அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், ‘ஜோ பிடெனின் வார்த்தைகள் எங்கள் தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.