கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். மிகச் சிறந்த சமூக, வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக இலக்கிய விருதுகள் பல பெற்றுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும்.
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள ‘’புத்தமங்கலம்’’ என்ற மிகசிறிய கிராமத்தில் 9.9.1899 அன்று கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். கிருஷ்ணமூர்த்தி மிகவும் உயரம் குறைவாக இருப்பார். இதனால் அவரை ‘’அகத்தியர்’’ என்று அழைத்தனர். அதுவும் பின்னாளில் இவரது புனைப்பெயரில் ஒன்றாக விளங்கியது.
1921ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிப் படிப்பை விட்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். இதனால் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அவருக்கு இரு மாபெரும் அறிஞர்களின் நட்பை அளித்தது. ஒருவர் “ராஜாஜி’’ என அனைவராலும் அழைக்கப்பட்ட ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார், மற்றொருவர் டி.சதாசிவம்.
1922ல் விடுதலை ஆனார். தமிழ் அறிஞர் “திரு.வி.க’வின் ‘‘நவசக்தி’’ என்ற பத்திரிகையில் 1923ல் உதவி ஆசிரியராக சேர்ந்தார். ‘’சாரதையின் தந்திரம்’’ என்ற இவரது முதல் நூல் 1927ல் வெளியானது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை! என்று ராஜாஜி அந்நூலுக்கு தாம் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்தும் பலமுறை எழுதினார் இவர். அதற்காக 1931ல் ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். 1932ல் ஆனந்த விகடனில் சேர்ந்தார். தமது நகைச்சுவை நிரம்பிய எழுத்துக்களால் அரசியல், இலக்கியம், இசை என பல பிரிவுகளில் எழுதினார்.
கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கு கொண்டார். மீண்டும் கைதானார். விடுதலைக்கு பின்னர், தமது நண்பரும் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் கணவருமான சதாசிவத்துடன் இணைந்து கல்கி பத்திரிகையை துவக்கினார்.
1942ல் இவர் எழுதிய அலை ஓசை என்ற சமூக புதினம் கல்கியில் தொடராக வெளிவந்தது. 1953ல் அது தனி நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இவருக்கு ‘’சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மறைவுக்குப் பின்னர் 1966ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இம்மாமேதை 5.12.1954 அன்று காலமானார்.