முதல் ஜவுளி ரயில்

சரக்கு போக்குவரத்துத் துறையில் மற்ற சரக்கு போக்குவரத்து முறைகளை விட சிக்கனமானது, வேகமானது, பாதுகாப்பானது ரயில்வே. எனவே, பல நிறுவனங்களும் ரயிலில் சரக்குகளை அனுப்பவே அதிகம் விரும்புகின்றன. இதற்காக, நமது மத்திய அரசு எடுத்துள்ள விஷேஷ சரக்கு ரயில்கள், தனி சரக்கு போக்குவரத்து இருப்புபாதை உள்ளிட்ட பல்வேறு முயர்சிகளால் தற்போது ரயில் சரக்கு போக்குவரத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் நம் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைத்ததற்கு சரக்கு ரயில்களை ரயில்வே துறை, மிக சிறப்பாக இயக்கியதும் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில், மேற்கு ரயில்வே, முதல் ஜவுளி பார்சல் ரயிலை கடந்த சனிக்கிழமை இயக்கியது. 25 சரக்குப் பெட்டிகள் கொண்ட இந்த முதல் டெக்ஸ்டைல் ​​பார்சல் ரயில், குஜராத்தின் சூரத்திலிருந்து பீகார் வரை இயக்கப்பட்டது. இதனை உத்னா புதிய சரக்கு முனையத்தில் இருந்து ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷால் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.