சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

டாக்டர் ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ சுதந்திர பாரதத்தின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்களையும், நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, பாரதத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888 செப்டம்பர் 5ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் தன் இளமைக் காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ராதாகிருஷ்ணன், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகவும் 1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகவும், 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

1923ல் இவரின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. ஹிந்து மதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம், ராதாகிருஷ்ணணுக்கு அழைப்பு விடுத்தது. அவர் தனது சொற்பொழிவுகளை பாரதம் சுதந்திரத்திற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். பாரதத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சும் என்றுரைத்தார்.

193ல் ராதாகிருஷ்ணன், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், 1939ல் காசி ஹிந்து பல்கலைகழகத்தின் துணை வேந்தராகவ்ம் நியமிக்கப்பட்டார். 1946ல் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவரானபோது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும் இவரது குழுவின் பரிந்துரைகள் உதவியது.

டாக்டர் ராதாகிருஷ்ணன், 1949ல் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். 1952ல் முதல் குடியரசு துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல், பாரத அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கியது. இரண்டுமுறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார். ராதாகிருஷ்ணன், தனது 86வது வயதில், 1975 ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் காலமானார்.