குரோபர்ஸ் என்ற நிறுவனம் ஆன்லைன் வழியாக மளிகைப் பொருட்களின் ஆர்டர்கள் பெற்று மக்களின் வீடு தேடி சென்று மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. இந்நிறுவனத் தலைவர் அல்பிந்தர் தின்ட்சா, ஒரு சமூக வலைத்தளப் பதிவில், ’10 நிமிடங்களில் பொருட்களை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்’ என பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஆன்லைன் நிறுவனங்களான ஸ்விக்கி, ஸொமாட்டோ, குரோபர்ஸ், பிட்சா டெலிவரி செய்யும் நிறுவனங்கள் எல்லாம் இது போன்ற வாக்குறுதிகள் அளித்து, பொருட்களை எடுத்து வந்து தரும் ஊழியர்களின் உயிருக்கும் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக இந்நிறுவன ஊழியர்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. பெருகிவரும் போக்குவரத்து நெரிசல், குறுகிய சாலைகள், மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் போன்றவற்றை மனதில் நிறுத்தி இந்நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில்
உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.