இது புதியது அல்ல..!!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. சமீபத்தில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்”என்ற நிலையை ஏற்படுத்தி, அவர்களை கோவிலில் நியமனம் செய்தது. உண்மையிலேயே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, இதுதான் முதல் முறையா? என்றால், நிச்சயமாக இல்லை என்பதை, பல வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றது.

நமது இந்து மதத்திலும், நமது நாட்டிலும் தொன்று தொட்டு ஆதிகாலம் முதலே, எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், எல்லா வழிபாட்டு தலங்களில், முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர், என்பதே உண்மை. ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் பல எண்ணற்ற பக்தர்கள், அனைத்து சாதியிலும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் அர்ச்சகர் ஆகி இருக்கின்றனர். இந்த நடைமுறை,  இன்றல்ல நேற்றல்ல,பழங்காலத்தில் இருந்தே, நடந்துவரும் இயல்பான செயல்.

ஒவ்வொரு சாதியினரும் அர்ச்சகராக உள்ள சில கோவில்கள்:

  • சென்னையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலுக்கும், வத்தலகுண்டு-வில் உள்ள இடமாயன் கோவிலுக்கும் “ பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களே ”, அர்ச்சகராக இருக்க முடியும்.
  • மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில், “ செம்பாடவர் ”இனத்தைச் சேர்ந்தவர்களே, அர்ச்சகராக பணி செய்ய முடியும்.
  • பைங்காடு ஐயனார் கோவிலில், “குயவர்” சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே, அர்ச்சகராக இருக்க முடியும்.
  • விருதுநகரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலிலும், குரங்கனியில் உள்ள முத்துமாலை கோவிலிலும் “நாடார்” சமூகத்தை சேர்ந்தவர்களே, அர்ச்சகராக பணி செய்யமுடியும்.
  • திருச்சியில் உள்ள உக்கிரகாளியம்மன் கோவிலில், “வெள்ளாளர்” சமூகத்தை சேர்ந்தவர்களே, அர்ச்சகராக இருக்க முடியும்.
  • சின்ன சேலத்தில் உள்ள பீரங்கி அய்யனார் கோவிலிலும், கல்லந்தாங்கத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலிலிலும், சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலிலும், “வன்னியர்” சமுதாயத்தினர் மட்டுமே, அர்ச்சகராக இருக்க முடியும்.
  • திருத்தேர்வலையில் உள்ள அன்னதான பத்ரகாளி அம்மன் கோவிலிலும், கரூரில் உள்ள தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவிலிலும், “பண்டாரம்” சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே, அர்ச்சகராக பணி செய்ய முடியும்.
  • குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில், “ஓதுவார்” சமுதாயத்தினரே, அர்ச்சகராக இருக்க முடியும்.
  • சங்கரன் கோவிலில் உள்ள உடைய நாயகி கோவிலில், “தேவர்” சமுதாயத்தினரே அர்ச்சகர் ஆக இருக்க முடியும்.
  • பெரிய மலை ஆலடி அம்மன் கோவிலில், “வண்ணார்” சமுதாயத்தினரே, அர்ச்சகர் ஆக இருக்க முடியும்.

மேலே குறிப்பிடப்பட்ட கோவில்களில், அந்த சமுதாயத்தினர் தவிர, வேறுயாரும் அர்ச்சகராக பணி செய்ய முடியாது. இவற்றைப் போலவே, பல கோவில்களில் அந்தந்த சமுதாயத்தினர் மட்டுமே, அர்ச்சகராக இருக்க முடியும்.

இவற்றைப் போலவே, அவரவர் குலதெய்வ கோவிலுக்கு, அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அர்ச்சகராக இருக்க முடியும்.

சமுதாய சீர்திருத்தம் ஏற்படுத்திய ராமானுஜர்:

அம்பேத்கர் அவர்கள் ராமானுஜரின் எல்லா செயல்களையும் மனதார பாராட்டி இருக்கின்றார். சமுதாயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்க, பெண்களுக்கு சமநீதி கிடைக்க, போராடியதில் “ராமானுஜருக்கு நிகர் அவரே” என அம்பேத்கர் புகழாரம் சூட்டி உள்ளார்.

“தான் கற்ற மந்திரம், அனைவரும் கற்க வேண்டும்” என்பதற்காக, அனைவருக்கும் கற்றுத் தந்தவர் ராமானுஜர். சமுதாயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் களைய , முற்போக்கு சிந்தனைகள் பெருக, இறைவன் முன் அனைவரும் சமம், பக்தி அனைவருக்கும் பொதுவானது என்பதற்காகவே ராமானுஜர் பாடுபட்டார். பின்னாளில், அதை நடைமுறைப்படுத்தி, அன்றாட வாழ்க்கையில், செய்தும் காட்டினார்.

“திருக்குலத்தோர்” என்ற அடைமொழியுடன் பட்டியலின மக்களை அழைத்தார். அவர்கள் ஆலயத்தில் நுழைந்து, வழிபாடு செய்யும் உரிமையையும் பெற்றுத் தந்தார். சாதி ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் அமைய பெரிதும் பாடுபட்டார், ராமானுஜர்.

ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தில், அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் உறுதி செய்தார். அது இன்றளவும் தொடர்கின்றது.

தமிழகத்தில் ராமானுஜர் காட்டிய வழியை பின்பற்றி, வட இந்தியாவில் மீரா, கபீர்தாசர் போன்றவர்கள் சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டார்கள். ” இறைவனின் முன்னால் அனைவரும் சமம் “, எனவும் கூறிவந்ததுடன், அவற்றை நடைமுறையிலும், அவர்கள் செயல்படுத்திக்காட்டினார்கள்.

சமுதாய சீர்திருத்தம் ஏற்படுத்திய வீரசாவர்க்கர்:

தீண்டாமையும் ,சாதியமும் வேரோடு அழிக்கப்பட வேண்டும். இந்து சமுதாயத்தின் நலனுக்காக, அது ஒழிய வேண்டும். ஏனென்றால், மற்றொரு மனிதனை, அவனது பிறப்பைக் காரணம் காட்டி அவமதிப்பது என்பது, மனிதகுலத்துக்கே எதிரான குற்றம்.அந்தக் குற்றத்தை ஒழிப்பதே தர்மத்திக்கும், நீதிக்கும், மனிதப் பண்புக்கும் உகந்த செயலாகும்” என்று உறுதிபடக்கூறுகிறார், சாவர்க்கர்.

உலகம் முழுவதும் ஒரே இனம் தான் உள்ளது. மனித இனம், மனித ரத்தம் என்ற ஒரே பொது ரத்தப்பிணைப்பால் அது வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்குப் புறம்பான மற்றவாதங்கள் அனைத்தும், தற்காலிகமானவை. அவை முழுமையான உண்மைகள் அல்ல. ஒவ்வொரு மனிதரின் நரம்புகளிலும், மனித குலத்தின் ரத்தம் முழுவதும் உள்ளது, என்பதை மட்டுமே, நாம் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்ல முடியும்.  வடதுருவம் முதல் தென்துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒற்றுமை என்பதே சத்தியம். மற்றவை அனைத்தும் சார்புநிலைகள் மட்டுமே”என்று உறுதிபடக்கூறுகிறார், சாவர்க்கர்.

“ஹிந்துஸ்தானத்தின் மீது படர்ந்திருக்கும் அன்னிய ஆட்சியைக்கண்டு கொதித்து எப்படி அதற்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டேனோ, அதேபோல, சாதிப்பாகுபாடுகளையும் தீண்டாமையையும் எதிர்த்தும் நான் புரட்சிசெய்ய வேண்டும்” என்று 1920ல் அந்தமான் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் சாவர்க்கர் குறிப்பிடுகிறார்.

1944ஆம் ஆண்டு தொண்டர்கள் அவரது பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டபோது, “தீண்டாமை ஒழிப்பு நாளாக” அதை அனுசரிக்குமாறு கேட்டுக்கொண்டார். “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது, இன்றைய சாதி முறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள், நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது” என்று வீரசாவர்க்கருக்கு எழுதிய கடிதத்தில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.  அவர் நடத்திய ‘ஜனதா’ பத்திரிக்கையில் பட்டியல் இன மக்களுக்காக சாவர்க்கர் செய்யும் பெரும் பணிகளைக் குறிப்பிட்டு ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’  என்றும் அம்பேத்கர் பாராட்டினார்.

சாவர்க்கர், ராமானுஜர் போன்றோர் தங்களுடைய வாழ்க்கையையே,  மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த, பெரிதும் பாடுபட்டு, தன்னுடைய வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற பல கோவில்களில், பெண்கள் அர்ச்சகராக இருந்து வருகின்றனர். நாடு எங்கிலும், எல்லா சாதியினரும், எல்லா சமயத்திலும், இறைவனுக்கு திருப்பணி செய்வதை, தங்களுடைய பெரும்பாக்கியமாக கருதி, பணி செய்துவருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில், 50 சதவீதத்திற்கும் மேல், எல்லா சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக இருந்து வருகின்றார்கள். இந்து சமுதாயத்தில், தொன்று தொட்டுவரக்கூடிய மரபு, எல்லா சாதியினரும் அர்ச்சகராக இருந்து, இறைவனுக்கு சேவை செய்வது.

நம்மை முகலாயர்களும், கிறிஸ்தவர்களும் அடிமைப்படுத்தி வைத்து இருந்த காலக்கட்டத்தில், இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் ஆணிவேராக கோவில்கள் இருந்தன. இப்போது, அந்த ஆணிவேரையே உடைத்து எறியும் முயற்சியாக, தமிழக அரசு செய்து வருகிறது என பல ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றது.

2006 – 2011 காலகட்டத்தில், திமுக ஆட்சியில் இருந்தபோது,  அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், எல்லா சாதியினரும் அர்ச்சகராக பணிபுரிய நியமன ஆணையை வழங்கினார். தற்போதும், புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக அரசு, மீண்டும் அதேபோல, எல்லா சாதியினரும் அர்ச்சகராக பணிநியமன ஆணையை வழங்குகின்றது. ஆனால், இந்த நடைமுறை புதியது அல்ல.

தங்களால் தான் எல்லாம் வந்தது எனக்கூறி, தங்களுக்கு சுய விளம்பரம் தேடவே, இவ்வாறு செய்கின்றது எனப் பல சமூகவலைத்தளங்களில் செய்தி உலாவருவது, அதன் உண்மைத் தன்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

ஒருவர் திருக்கோவிலின் உள்துறையின் சேவை செய்ய வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தை சேர்ந்தவராகவும், திருக்கோவிலின் நடைமுறைகளை பற்றி, நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

தாயார் ஆண்டாள் நாச்சியார் திருக்கோவிலில், காலம் காலமாக தாயாருக்கும் பெருமாளுக்கும் எந்தவித பிரதிபலனும் இல்லாது,சேவை செய்துவருகின்றனர். அங்கு மற்ற சமுதாயத்தினரை போடுவதால், பல சமுதாய மக்கள் கோபம் கொண்டு, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“நாடார் இளைஞர் எழுச்சி மன்றம்”, “வெண்ணிக்காலாடி எழுச்சி பாசறை”, “வீரகொடி வெள்ளாளர் சமூகம்”, “சாலியர் எழுச்சிக் கழகம்”, “பறையர் மகா சபை”, “சத்ரியராஜுக்கள் இந்து இளைஞர் முன்னணி”, “இல்லத்துப்பிள்ளைமார் ஸ்ரீநாராயண குரு நற்பணி மன்றம்”, “ராஜகம்பளத்தார் (நாயக்கர்) வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம்”, “ஒண்டிவீரன் (அருந்ததியர்) முன்னேற்ற கழகம்”, “அனைத்திந்திய இந்து சமுதாய கூட்டமைப்பு”, “அனைத்திந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு” போன்ற சமுதாய அமைப்புகள், தங்களுடைய கண்டன அறிக்கையை தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்து சமுதாயம் தோன்றிய நாள் முதலே, ஹிந்து பாரம்பரியம் உருவான நாள் முதலே, தமிழர்கள் வாழும் காலம் ஆரம்பித்தே, எல்லா நேரத்திலும், எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகவே பணிபுரிந்து வருகின்றனர்.  இது புதியது அல்ல, எப்போதும் தொடரும் நடைமுறையே.

“எல்லோரும் ஓர் குலம்…

எல்லோரும் ஓர் இனம்…

எல்லோரும் இந்திய மக்கள்…

எல்லோரும் ஓர் நிறை…

எல்லோரும் ஓர் விலை…

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

மகாகவிசுப்ரமணியபாரதியார்

 

. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

 

உதவியதளங்கள்:

http://savarkar.org/en/index.html

https://m.dailyhunt.in/news/india/tamil/kathir+news-epaper-kathir/butharukku+samamana+maberum+manithar+ena+ambethkaral+barattappattavar+veera+savarkkar+boy+biracharathai+bodib+bodiyakkum+takavalkal-newsid-n145736192