அனைத்திற்கும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக மாறிப் போன இன்றைய சூழலில், பெரும்பாலானோர் அதில் வருந்தும் ஒரு முக்கிய விஷயம் அதில் உள்ள தங்களது புகைப்படமாகத்தான் இருக்கும். எப்போதோ எடுத்தது, அரைகுறை வெளிச்சத்தில் தெளிவில்லாமல் எடுத்தது என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. சமயத்தில், அதில் இருப்பது நாம்தானா என்ற சந்தேகம் நமக்கே வருவதும் உண்டு. குழந்தைகளும் இதில் ஒரு சிக்கல். வேகமான அவர்களின் வளர்ச்சி காரணமாக, பள்ளியில் சேர்க்கும் போது பல நேரங்களில் அவர்களின் புகைப்படம் பொருந்தாமல் போகிறது. இனி இதுப்போன்ற கவலை தேவை இல்லை. இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய வழி உள்ளது. ஆதார் சேர்க்கை மையம் செல்வதன் மூலம் உங்கள் பழைய ஆதார் புகைப்படத்தை நீங்கள் மாற்ற முடியும். ஆதார் கார்டை டவுன்லோட் செய்து எடுத்துக் கொண்டு ஆதார் சேர்க்கை மையத்திற்குச் செல்லவும். புகைப்படம் மாற்றப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்துடன் அளிக்கவும். அம்மையத்தின் அலுவலர்கள், தங்களை அப்போது புதிதாக புகைப்படம் எடுத்து ஆதாரில் இணைத்துவிடுவார்கள். அங்கு செல்லும் முன், சற்று மேக்கப் செய்துக்கொண்டு செல்வதையும் சிந்திக்கலாம் !!!