ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படும் ஹிந்துக்கள் பண்டிகை. சில பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று கூறி தண்ணீரின் அருமையை உலகுக்கு உணர்த்திய ஹிந்துக்கள் நீருக்கு விழா எடுக்கும் ஒரு அற்புதத் திருநாள் இது.
ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும். செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே, இன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கும் வற்றாத ஜீவ நதிகளை வணங்குவார்கள். உழவர்கள் இந்நாளில் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இதனையொட்டியே ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்ற பழமொழியும் வந்தது.
ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. இதனால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை.
காவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து வளைகாப்பு செய்வது போல பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்களும் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். சிலரது வீடுகளில் முளைப்பாறி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பரவல், தமிழக அரசின் அதீத கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை என்பதால் நதிக்கரை, ஆற்றங்கரைகளில் பண்டிகைகள் களைகட்டவில்லை. எனவே, இன்றைய சூழ்நிலையில் நம்மால் ஆற்றங்கரை, நதிக்கரைகளுக்கு போகமுடியாவிட்டாலும் வீட்டிலேயே சமைத்து படையலிட்டு காவிரி அன்னையை வீட்டு வாசலில் இருந்தே வணங்கலாம். அனைத்து நலங்களையும் வளங்களையும் பெறலாம்.