நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. இவை மாணவர்களுக்கு வரப்பிரசாதம். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும் தி.மு.கவும்தான். கருணாநிதியின் சுட்டுவிரல் அசைவுக்கு மத்திய அரசு தலைவணங்கும் என்று சோனியா கூறினார். அவ்வளவு சக்தி படைத்த நீங்கள் ஏன் ஓ.பி.சி மாணவர்கள் பற்றி கவலைப்படவில்லை? இன்று நீட் பற்றி பேச தி.மு.க, காங்கிரசுக்கு அருகதை கிடையாது. கிராமப்புற மாணவர்கள் நலனுக்காக அ.தி.மு.க அரசு 7.5% இடஒதுக்கீடு கொடுத்தது. அடுத்தவர் குழந்தைகளுக்கு தனது இனிஷியல் போடும் வேலையை தி.மு.க செய்யக்கூடாது. தி.மு.கவினர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தகுதி அற்றவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க மக்களுக்கு அல்வா கொடுக்கிறது. நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படிதான் நீட் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையை நாடகம் ஆடுவதற்காக தி.மு.க பயன்படுத்தி வருகிறது’ என்றார்.