மறைமுக சொத்து வரி உயர்வா?

தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் விலைவாசிகள், மின் கட்டணம், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை என அனைத்தும் கிடுகிடுவென உயர்ந்துவிட்டன. அந்த வரிசையில் தற்போது இடம் பெற்றிருப்பது சொத்து வரி உயர்வு. ஆனால், இதனை வரி உயர்வு என கூறாமல் ‘கணக்குத் திருத்தம்’ என்ற பெயரில் மறைமுகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து கேட்டால், தனித்தனியாக ஒவ்வொரு சொத்து வரி கணக்கையும் திருத்தம் செய்துள்ளது என கூறுகின்றனர். இதனால் சொத்து வரியாக 30 முதல் 50 சதவீதம்வரை கூடுதல் தொகை கட்ட மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுகின்றனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தற்போது, பலருக்கும் வேலை இல்லாத நிலை, வாடகை தர முடியாத, வாடகை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. நகரங்களில் பல வீடுகள் இன்றும் காலியாகவே உள்ளன, விலைவாசி உயர்வு, குழந்தைகள் பள்ளிக் கட்டணம் என மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த சூழலில் தி.மு.க அரசு, இதுபோன்ற மறைமுக வரி உயர்வுகளை அமல்படுத்தியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் நடவடிக்கையாகவே இருக்கிறது. முன்னதாக சட்டசபை தேர்தலின் போது தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில், ‘சொத்து வரி உயர்த்தப்படாது’ என, வாக்குறுதி அளிக்கப்பட்டதை மக்கள் மறக்கவில்லை என்பதை தி.மு.க நினைவில்கொள்ள வேண்டும். இதன் தாக்கம் அடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.