தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு மகத்தானதொரு ஆலயம் அமைத்திட வேண்டும் என்பது சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவு. இந்த நூற்றாண்டு கால கனவு பல காரணங்களால் தடைப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் குமரி அனந்தன் இதற்காக குரலெழுப்பி வந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்தக் கோயில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.
2010ல் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தை கருணாநிதி திறந்து வைத்தார். அங்கு ரூ.150 கோடியில் பாரத மாதா ஆலயமும் நூலகமும் அமைக்கப்படும் என்று முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். கோயில் திறப்பு விழாவுக்கு பாரத பிரதமர் மோடியை அழைக்க திட்டமிடப்பட்டது. 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தது.
இந்நிலையில், இந்த ஆலயத்தை செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகஸ்ட் 1ம் தேதி திறந்துவைத்தார். இன்னும் இரு நாட்களில் முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி வரவுள்ள நிலையில், அமைச்சர் தலைமையில் ஒரு சாதாரண நிகழ்வாக பாரத மாதா ஆலயத்தைத் திறந்து வைத்தது, தமிழக தேசபக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுவும் ‘பாரத மாதா நினைவாலயம்’ என்று பெயரிட்டுள்ளார்கள். நினைவாலயம் என்பது இறந்தவர்களுக்கு வைப்பது. பாரத மாதா என்ற தெய்வத்துக்கு பிறப்பேது, இறப்பேது? அதென்ன ‘நினைவாலயம்’ என தேசபக்தர்கள் திடுக்கிறார்கள்.
ஆங்கிலேய அரசுக்கு சேவகம் செய்த நீதிக்கட்சியின் வழிதோன்றலான தி.மு.க, ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலப் பணிகளைவிட, தேசிய ஒருமைப்பாட்டை சிதைப்பதிலேயே அதிக ஈடுபாடு காட்டுகிறது.
அடிமை சேவகம் செய்த நீதிக்கட்சி ஆட்சிக்கு நூற்றாண்டு விழா எடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் தேசிய உணர்வை கொச்சைப்படுத்துகிறார்கள். இது தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்துக்கு அவசர கதியில் நடைபெற்ற திறப்பு விழாவை ரத்து செய்து, பிரம்மாண்ட கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதற்கு மத்திய பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.