கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள சொதிகுப்பம் என்ற கிரமத்தில், உப்பனாறு கரையில் 15 கி.மீ தூரத்துக்கு மாங்குரோவ் காடுகள் உள்ளன. தானே புயலிலும், 2015ம் ஆண்டு வெள்ளத்திலும் இந்த மாங்குரோவ் காடுகள் அழிந்து விட்டன. மீண்டும் இந்த காடுகளை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அவற்றை மீண்டும் உருவாக்க உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அதில், 10 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு குழு மதிப்பீடு செய்துள்ளது. மாங்குரோவ் காடுகளை மீண்டும் வளர்க்காவிட்டால், சுற்றுச்சூழலுக்கும் பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். இதையதையடுத்து மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.