புலிகள் காப்பகம் உலக அங்கீகாரம்

புலிகள் பாதுகாப்பு என்பது காடுகளின் பாதுகாப்பின் அடையாளம். இதனால் காடுகளைக் காக்க புலிகளை பாதுகாப்பது அவசியமாகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் விளைவாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, கடந்த 2010ல் பாரதத்தில் புலிகளின் எண்ணிக்கை 1,076 ஆக இருந்த்து ஆனால் கடந்த 2018ல் அவைகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 18 மாநிலங்களின் காடுகளில் புலிகள் வாழும் நிலப்பரப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை சுமார் 12,852 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, உலகளாவிய புலிகள் பாதுகாப்பு தரநிர்ணய அமைப்பு (CA|TS), அசாமில் உள்ள உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா, மனஸ் மற்றும் ஒராங் தேசிய வனங்களை புலிகளின் காப்பகங்களாக அங்கீகரித்துள்ளது. இதனால் இவை தற்போது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ், இதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது, சத்புரா, கன்ஹா, பன்னா புலிகள் காப்பகங்கள் (மத்திய பிரதேசம்), முதுமலை, ஆனமலை (தமிழ்நாடு), பெஞ்ச் (மகாராஷ்டிரா), பரம்பிக்குளம் (கேரளா), பந்திப்பூர் (கர்நாடகா), துத்வா (உத்தரபிரதேசம்), வால்மீகி (பீகார்) மற்றும் சுந்தர்பன்ஸ் (மேற்கு வங்கம்) ஆகியவையும் அதே வகையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார்.