நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்திய மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா படிப்படியாக குறைந்தது. எனினும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு குறையாமல் இருந்தது. நாளடைவில் மற்ற மாநிலங்களில், கொரோனா தாக்கம் குறைந்தாலும், பக்ரீத் கால கட்டுப்பாட்டுத் தளர்வு, முறையற்ற நிர்வாகம், ஒருங்கிணைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஜூலை 31, ஆகஸ்ட் 1ல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இக்குழு கேரளாவில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம், மூன்றாவது அலையை தடுக்க என்ன செய்யப்பட்டுள்ளது, உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.