அனைவரும் இணைய வேண்டுகோள்

நமது பாரத நாட்டின் 75வது சுதந்திர தினம் 2022ல் கொண்டாடப்பட உள்ளது. இது ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைவரும் இந்த மகோத்சவத்தில் கலந்துகொள்வதையும் பங்கெடுப்பதையும் உறுதி செய்யுமாறு பா.ஜ.க எம்.பி.க்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு இது குறித்து விளக்கமளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ‘2047ம் ஆண்டில் பாரதம் 100 ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்யும். எனவே அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், சிறந்த வரையறைகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து மக்களிடமிருந்து கருத்துக்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனவே, 2022 ஆகஸ்ட் 15 முதல் 2023 ஆகஸ்ட் 15 வரை ஒரு தொகுதிக்கு 75 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேர் செல்வார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 75 மணி நேரம் செலவழிப்பார்கள். மக்களிடம் நாட்டின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வ யோசனைகளை சேகரிப்பார்கள், இது நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைக்கப்படும் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் தெரிவித்தார்’ என கூறினார்.