வெள்ளித் திரையின் வெளிச்சத்தில் ஒளிரும் ஏ.வி.எம் என்ற அந்த மூன்றெழுத்து தரத்தின் சான்று. வன்முறையற்ற, ஆபாசமற்ற, எல்லோரும் பார்க்கத் தகுந்த திரைப்படம் என்பதன் ஐ.எஸ்.ஐ முத்திரை அது.
பல கலைஞர்களை, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்கு தந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாள் இன்று.
அவரது வாழ்க்கை சாகசங்களால் நிரம்பியது. இழப்புகளுக்கு உடைந்து போகாமல், கனவுகளைச் சிதறவிடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்த அடுத்தடுத்த அவரது நகர்வுகள், ஒரு மாபெரும் நிறுவனமாக ஏவி.எம் நிறுவனத்தை வளர்த்தெடுத்தன.
சிறு வயதிலேயே வணிகத்தில் ஆர்வம் இருந்தது மெய்யப்பனுக்கு. அப்பா நடத்திய கடையில் வணிக நுட்பங்களைக் கற்றார். 22 வயதில் போர்டு கார் கம்பெனியின் முகவரானார். சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டு `சரஸ்வதி ஸ்டோர் ரெக்கார்டிங் கம்பெனி’ நிறுவனத்தைத் தொடங்கினார்.
கொல்கத்தா சென்று அல்லி அர்ஜுனா, ரத்னாவளி போன்ற திரைப்படங்களை எடுத்தார். அவை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனாலும், முடங்கவில்லை. பூகைலாஷ், திருவள்ளுவர் போன்ற படங்களைத் தயாரித்தார். சபாபதி என்ற படத்தை அவரே இயக்கினார். தமிழைக் கடந்து கன்னடத்துக்கும் பயணமானார்.
கிராபிக்ஸ் பற்றி சிந்தித்திராத காலகட்டத்தில் `வேதாள உலகம்’ படத்தில் மந்திர, தந்திரக் காட்சிகளெல்லாம் கேமராவைப் பயன்படுத்தியே எடுத்துக்காட்டினார். சகல வசதிகளுடன் சென்னையில் ஏ.வி.எம் ஸ்டுடியோவை உருவாக்கினார்.
தன் வெற்றிக்குப் பின்னணியாக இருந்த தொழிலாளர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார். பலருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவர்களின் பிள்ளைகள் படிக்க பள்ளியும் தொடங்கினார்.
ஏ.வி.எம் கடுமையான உழைப்பாளி. குறை பொறுக்க மாட்டார். ஆனால், நல்ல விஷயங்களை மனம் திறந்து பாராட்டுவார்.
ஏ.வி.எம்மின் முதல் தயாரிப்பு நாம் இருவர். அந்தப் படத்தில் பாரதியாரை பாடலாசிரியராக்கினார் மெய்யப்பன். அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பாரதியார் பாடல்களை அரசுடமையாக்க விரும்பினார். அவற்றின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பனை அணுகி, `எவ்வளவு பணம் வேண்டும்’ என்று கேட்க, `பாரதி இந்தத் தேசத்தின் சொத்து. ஒரு ரூபாய்கூட வேண்டாம்’ என்று அள்ளிக் கொடுத்தார் மெய்யப்பன்.