உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28ல் கொண்டாடப்படுகிறது. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் மக்கள் வாழ்வதற்கு இயற்கை வளம் இன்றியமையாதது.
ஆனால், நம்மால் இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடியாத நிலை உள்ளது. இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது.
100 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மொத்த வனங்களின் பரப்பளவு 70,000 லட்சம் ஹெக்டேர். பாரதத்தில் ஆண்டுதோறும் 15 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 19 சதவீதமாக உள்ளன. தமிழகத்தில் 13 சதவீதக் காடுகள்தான் இருக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் நாம் அளவுக்கு அதிகமாகவே இயற்கை வளங்களை அழித்து, அனுபவித்து வருவதால் இன்று அவை அருகிவிட்டன. மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். ஆனால் அதனை அவன் இன்று மறந்துவிட்டான். இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் அவற்றை தெய்வமாக வழிபட்டனர்.
மனிதனின் பேராசை காரணமாக காடுகள் அழிப்பு, மலைகள் அழிப்பு, மணல் கடத்தல், பிளாஸ்டிக் பயன்பாடு, ரசாயன உரங்கள், ஆயுத பெருக்கம் என பஞ்சபூதங்களையும் பாழ்படுத்தி வருகிறான். உலகில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் இயற்கைக்கு பாதகமாக நடந்துக் கொள்வதில்லை. மாறாக இயற்கையை வளர்க்கவே செய்கின்றன. ஆனால் மனிதன்?
உதாரணமாக, ஒரு சொட்டு நீர்கூட உற்பத்தி செய்யமுடியாத மனிதன் அதனை பாழாக்கத் தயங்குவதே இல்லை. மனிதனின் கைப்பட்ட பிறகு நீர் என்பது பெயர் மாறி சாக்கடை என்ற பெயரை பெருகிறது. எனவே, இனியாவது சிந்திப்போம்.
நமக்கு இருப்பதோ ஒரேபூமி, இதில்தான் நமது வருங்கால சந்ததியினர் வாழ வேண்டும். எனவே, இதனை நமது சந்ததியினருக்கு நல்ல முறையில் விட்டு செல்வது நமது கடமை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும்.