உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் அதனை தடுக்க பல்வேறு ஆக்கபூர்வ முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், கொரோனா கட்டுப்பாடுகள், கட்டாய தடுப்பூசி, கட்டாய முகக்கவசம், பொதுமுடக்கம், கொரோனா பரிசோதனைகள் என எதுவும் வேண்டாம். அது தனி மனித உரிமைகளை பாதிக்கும் என இவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘விழிப்புணர்வு இந்தியா இயக்கம்’ (Awaken India Movement) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு ‘சுதந்திர பேரணி’ என்ற நிகழ்ச்சியை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இது பாரதத்தில் மட்டுமல்ல உலக அளவில் செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு நாட்டு அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சுமார் 45 நாடுகளில் உள்ள 120 நகரங்களிலும் உள்ள மக்களை கூட்டி நடத்தி வருகிறது. கடந்த ஜூலை 24ல் நாகாலாந்தில் கோஹிமா, திமாபூரில் உள்ள சில உள்ளூர் தேவாலயங்கள், சமூக ஆர்வலர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
அதேபோல மேகாலயாவின் ஷில்லாங், தெலுங்கானாவின் ஹைதரபாத் உள்ளிட்ட இடங்களிலும் பேரணிகள் நடைபெற்றதாகவும் பல இடங்களில் கொரோனா பொதுமுடக்க விதிமுறைகள் காரனமாக காவலர்கள் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கு மட்டுமல்ல, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதேபோல ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் உலகம் முழுவதிலும் நடத்தப்பட்டுள்ள இந்த பேரணிகள், அதன் பின்னணியில் சில பெரிய சக்திகள் செயல்பட்டு வருகின்றன என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.