கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி, ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏழை வாடகைதாரர்களின் வாடகையை அவர்கள் சார்பாக மாநில அரசே வழங்கும். எனவே அவர்களிடம் வாடகையை நில உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார். ஆனால் அதனை இன்றுவரை நிறைவேற்றவில்லை.
இதனையடுத்து, அறிவித்தபடி டெல்லி அரசு வீட்டு வாடகையை செலுத்த வேண்டும் எனக் கோரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நில உரிமையாளர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால் தரப்பு ‘இது ஒரு அரசியல் அறிக்கை மட்டுமே, அதனை செயல்படுத்த முடியாது’ என தெரிவித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரதிபா எம் சிங், ‘ முதல்வர் அளித்த வாக்குறிதியை வெறும் அரசியல் அறிக்கையாக கருத முடியாது. நல்லாட்சி என்பது ஆள்பவர்கள் தங்கள் குடிமக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான். நியாயமான காரணங்கள் இன்றி அதனை நிராகரிக்கக் கூடாது. இந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தக் கூடியது. எனினும் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா முடியாதா என்பதை அரசு 6 வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அதற்கான தெளிவான கொள்கையை உருவாக்க வேண்டும். பெருவாரியான மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்’ என தீர்ப்பளித்தார்.