இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையொட்டி வங்கக் கடலில் பாரத, பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் போர்ப் பயிற்சியை நேற்று, இன்று என ல2 நாட்களுக்கு நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டுப் போர் பயிற்சியில் பிரிட்டனின் மிகப் பெரிய போர் கப்பலான ஹெச்.எம்.எஸ் குயின் எலிசபெத் பங்கேற்றுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாகக் கூட்டுப் போர் பயிற்சியை பிரிட்டன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த போர் பயிற்சி பாரதம் உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவும். இது பாதுகாப்பு விவகாரத்தில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவிலுள்ள கார்வார் துறைமுகத்தில் அக்டோபர் 21 முதல் 23 வரை பாரத பிரிட்டன் கடற்படையினர் மீண்டும் போர்ப் பயிற்சியை நடத்தவுள்ளனர். அதைத் தொடர்ந்து கோவாவில் அக்டோபர் 24 முதல் 27 வரை அடுத்த கூட்டுப் போர் பயிற்சி நடைபெறும் என்று பாரத கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.