பாரதத்தின் தேசியப் பழம்

பழங்களின் அரசன் மாம்பழம். முக்கனிகளில் இதற்குதான் முதல் இடம். அதிக வாசனையுடன், சுவை, மருத்துவக் குணம் நிறைந்தது மாம்பழம். மாம்பழம் உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளையும். மாங்கனி உற்பத்தியில் நமது பாரதம் முதலிடத்தில் உள்ளது.

உலகில் பாதியளவு மாம்பழம் இங்குதான் விளைகிறது. முன்னூறுக்கும் அதிகமான ரகங்கள் இதில் உள்ளன. இதுதான் நமது தேசியக் கனி என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும்தான். வங்கதேசத்தின் தேசிய மரம் மாமரம்தான்.

முக்கனிகள் சங்கமிக்கும் காலமும் இதுதான். மாங்கனிக்கு ஆன்மிகத்திலும் ஒரு முக்கிய இடமுண்டு. முருகன் தாய் தந்தையிடம் கோபித்துக்கொண்டு பழனி மலையேறி அமர்ந்ததன் காரனம் ஒரு மாங்கனிதான். காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா ஹிந்துக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒற்றை மாமரம் உள்ளது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத்தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

தேங்காயை போலவே மாங்காயையும் தட்டிப் பார்த்து வாங்க வேண்டும். தட்டும்போது சத்தம் குறைந்திருந்தாலோ, கேட்கவில்லை என்றாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்ததாக இருக்கலாம். இயற்கையான கறுப்புப் புள்ளிகள் இல்லாத பழங்கள் செயற்கை முறையில் கனிய வைக்கப்பட்டவை. மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு, சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறப் பழம் ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்டதாக இருக்கலாம். மேலே தெளிக்கப்பட்ட ரசாயனம், பூச்சி மருந்தை நீக்க எந்தப் பழமாக இருந்தாலும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும். பழத்தோலில் சத்துக்கள் இருக்கும்தான். ஆனால், அதே தோலில்தான் அதை பழுக்கவைக்க அடிக்கப்படும் மருந்துகளும் இருக்கும். எனவே, கடைகளில் கிடைக்கும் பழங்களின் தோலை நீக்கி சாப்பிடுவதே சிறந்தது.

இன்று தேசிய மாங்கனி தினம்

சங்கீதா சரவணகுமார்