சாதிக்கும் பெண்கள்

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவரிடமிருந்து பிரிந்த ஆஷா, வறுமையின் துயரப்பிடியில் இருந்தார். அந்த வறுமையிலும் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சுமந்துகொண்டு பட்டப்படிப்பை முடித்தார். ஆர்ஏஎஸ் தேர்வு அந்த நேரத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஜோத்பூரில் கிடைத்த தூய்மை பணியாளர் வேலையை ஏற்றுக்கொண்டார். தினமும் ஜோத்பூர் நகர வீதிகளை சுத்தம் செய்தபடி குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு ஆர்ஏஎஸ் தேர்வுக்கு விடாமல் படித்தார். ராஜஸ்தான் நிர்வாக சேவைத் தேர்வில் ( RAS) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கலந்து கொண்டார் ஆஷா. கொரோனா காரணமாக தேர்வு முடிவுகள் இரண்டு வருடம் கழித்து தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஆஷா தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு துணை கலெக்டர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் துணை கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து ஆஷா கூறுகையில், ‘என்னுடைய கடின உழைப்பின் விளைவாகவே இது நடந்தது என்று நம்புகிறேன். நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக விரும்பினேன். ஆனால் வயது தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக ஐ.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு கிடைத்த இந்த புதிய தகுதி மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே என் நோக்கம்’ என்று கூறியுள்ளார் ஆஷா.

மற்றொரு நிகழ்வாக, கேரளாவைச் சேர்ந்த அனி சிவா என்ற கணவனால் கைவிடப்பட்ட பெண், திருவனந்தபுரம் மாவட்டத்தில் துணை கண்காணிப்பாளராக அண்மையில் பொறுப்பேற்றார். அதற்காக தனக்கு எதிராக மலைபோல் குவிந்து இருந்த அனைத்து கஷ்டங்களையும் வென்று சாதித்தார். ஐஸ்கிரீம் விற்றார் காவல்துறை அதிகாரியாக விரும்பிய ஆனி சிவாவை, கைக்குழந்தையுடன் இருக்குபோதே அவரது கணவர் கைவிட்டார். அதன்பிறகு, சோப்பு, சோப்புத்தூள், ஐஸ்கிரீம் விற்று தன் வாழ்க்கையை நடத்தினார். இந்த பணிகளை செய்து கொண்டே சமூகவியலில் பட்டம் பெற்றார். பின்னர், 2019 ஆம் ஆண்டில், காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்று கனவுகளுடன் அதற்கும் தயாரானார். ஒன்றரை ஆண்டுகள் கடின முயற்சியின் விளைவாக திருவனந்தபுரத்தில் துணை ஆய்வாளராக தற்போது பொறுப்பேற்றுள்ளார் அனிசிவா. அவமானங்களை உரமாக்கி முயற்சி செய்தால் சாதனைகள் கண்டிப்பாக சாத்தியமாகும் என்பதற்கு இந்த பெண்கள் சிறந்த உதாரணம்.