இன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு

அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர். ஆனால் அதில் 80 சதவீதம் பேர் படைப்பாக்க சிந்தனை, கள அறிவு வேலைவாய்ப்பு திறன் போன்றவற்றில் பின்தங்கியுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொழில் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு முறை 2006ல் ரத்து செய்யப்பட்டது. இதனால் சமூக பொருளாதார கல்வி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் களையப்படவில்லை. மாறாக வசதியான மாணவர்கள் அதிக அளவில் தொழில் கல்வியில் சேர்கின்றனர். நுழைவு தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதால் பல பள்ளிகள் பயிற்சி மையங்களாக மாறிவிட்டன. பிளஸ் 2 பாடங்களை மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் பெற வைக்கின்றனர். அதனால் மாணவர்களால் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. எனவே, பள்ளி கல்வி முறையை சீரமைத்தல், தேர்வு முறையை சீராக்குதல், அரசு பள்ளிகளை தரம் உயர்த்துதல் போன்றவற்றால் தற்போது தரம் குறைந்து வரும் இன்ஜினியரிங் கல்வி முறையை மீட்கலாம். எதிர்காலத்தில் லட்சக்கணக்கான பொறியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் சரியான வழி கிடைக்கும்’  என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.