சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்றார் மகாகவி பாரதி. உயர்தனி செம்மொழியாக விளங்கி ஒளிவீசிக் கொண்டிருக்கும் தமிழ் மொழியைப் போற்றி மேலும் காக்கவேண்டும். தமிழ் மொழியைப் பிழையில்லாமல் பேசுவதும், எழுதுவதும் தமிழன்னைக்கு நாம் செலுத்தும் காணிக்கையாகும். தமிழ் மொழியைப் பேசும்போது, எழுதும்போது, படிக்கும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பல உள்ளன. பொருள் மயக்கம் இன்றி மொழிப்புலமை பெற அவை பேருதவி புரியும். எழுதும்போதோ பேசும்போதோ இடைவெளிவிட்டு எழுத, பேசவேண்டும். அவ்விடைவெளியை தேவையற்ற இடங்களில் விட்டால் பொருள் குழப்பம் ஏற்படும்.
எம் மொழி யார்க்கும் எளிது எம்மொழியார்க்கும் எளிது.இத்தொடர்களின் முதலாவது, ‘எங்கள் மொழி எல்லோருக்கும் எளிது’ என்ற பொருளைத் தருகிறது. இடைவெளியின்றி எழுதினால் எந்த மொழியைப் பேசுவோர்க்கும் எளிது என்ற பொருளைத் தருகிறது.எனவே இடைவெளி விட்டு எழுதுவது என்பதைக் கவனித்து எழுத வேண்டும். தேவையற்ற இடங்களில் இடைவெளி விட வேண்டிய அவசியமில்லை.
ஐந்துஅடுக்கு வீடு ஐந்து அடுக்கு வீடு முதல் தொடர் இடைவெளியின்றி எழுதும்போது ‘ஐந்து அடுக்குகளைக் கொண்டவீடு என்ற பொருளையும், இடைவெளியுடன் எழுதும்போது ஐந்து (எண்ணிக்கை) அடுக்கு வீடுகள்’ என்ற பொருளையும் தருகிறது. இன்றுமுதல் பாடல் பாடினோம் இன்று முதல்பாடல் பாடினோம். முதல் தொடர் ‘இன்றிலிருந்து பாடல் பாடினோம்’ என்ற பொருளையும், இரண்டாவது தொடர் ‘இன்று முதல் பாடல் பாடினோம்’ என்ற பொருளையும் தருகிறது. இவ்வாறு சொற்களைச் சேர்த்தும், பிரித்தும் எழுதுவதால் பொருளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன. எனவே படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் குழப்பம் ஏற்படாமல் இருக்க பிழையின்றி எழுதுவோமாக.
(நற்றமிழ் அறிவோம்)
கட்டுரையாளர் : முதுகலைத் தமிழாசிரியை, விவேகானந்தா வித்யாலயா, திருவொற்றியூர்