சர்வதேச நீதி தினம்

இன்று சர்வதேச நீதி தினம். ஜூலை 17, 1998-ல் ரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது. இதன்படி, 2002ல் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பாரதம், சீனா உள்ளிட்ட 40 நாடுகள் கையெழுத்திடவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல், சூடான், ரஷ்யா ஆகிய நாடுகள் முதலில் கையெழுத்திட்டன. என்றாலும் பிறகு இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டன. இந்த நாடுகள் எல்லாம் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக்ககூட இல்லை.

இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பாரதம் ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பது பரந்த பொருள் கொண்டதாக இருப்பதும், உறுப்பு நாடுகள் இல்லாத நாடுகளையும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்னும் விதியையும் பாரதம் எதிர்த்து வருகிறது. முக்கியமாக, அணு ஆயுதப் பயன்பாட்டைக் குற்றமாக வரையறுக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தவறிவிட்டதை பாரதம் எதிர்க்கின்றது. பாரதத்தின் இறையாண்மையையும், பாரத சட்ட சுதந்திரத்தின் அதிகாரத்தையும் இது குறைப்பதாக இருந்துவிடும் என்ற தன் அச்சத்தையும் பாரதம் வெளிப்படுத்தியது. மேலும், ஒரு தேசத்தின் எல்லைகளுக்குள் நடக்கும் செயல்பாடுகளை போர்க் குற்றங்களில் இந்த நீதிமன்ற சட்டங்கள் சேர்த்துள்ளதையும் நம் பாரதம் எதிர்த்தது.

இந்த நீதிமன்றம், வலுவான ஐரோப்பிய மேலை நாடுகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டுப் பின்தங்கிய நாடுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களைத் திட்டமிட்டுக் குறிவைப்பதாக, ஆப்பிரிக்க ஒன்றியம் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இதுவரை சுமார் 12 குற்றவியல் விசாரணைகளை மட்டுமே முன்னெடுத்து உள்ளது. அவற்றில் ஜோர்ஜியா, மியான்மர் தவிர மீதமுள்ள அனைத்தும் ஆப்பிரிக்க நாடுகளே என்பது குறிப்பிடத்தக்கது.