நிர்வாகத் திறமையற்ற மாநிலங்கள்

தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என்று தமிழகம், டெல்லி, மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்கள் தொடர்ச்சியாக குறை கூறி வருவதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், ‘மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்புகிறது. அவை தீருவதற்கு முன்னர் தகவல் தெரிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. ஆனால், திட்டமிட்டபடி மாநில அரசுகள் செயல்படாமல், தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் குழப்பத்தையும் உருவாக்கி வருகின்றன. தடுப்பூசியை நிர்வகிக்கும் விஷயத்திலும் சில மாநிலங்கள் சரியாக செயல்படுவதில்லை. ஆனால், அவை ஒன்றுக்கும் உதவாத அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தடுப்பூசிகளை பெறும், எப்போது பெறும் என்ற தகவல்கள் முன்கூட்டியே அளிக்கப்படுகின்றன. மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மாநில அரசுகள்தான் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது அவர்களின் நிர்வாக திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. இது, பிரச்சினை என்ன, அதற்கு யார் காரணம் என்பதையும் தெளிவாக விளக்குகிறது’ என தெரிவித்தார்.