கல்விக்கண் திறந்த கர்ம வீரர்

காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார்.தனது ஆறு வயதிலேயே தந்தையை இழந்த காமராஜரால் 11வயதுக்கு மேல் கல்வியைத் தொடர முடியவில்லை. குடும்பத்தை காக்க மளிகை கடையில் பணியாற்றினார். காந்தியடிகள் மீதும் பாரத சுய ஆட்சி கொள்கை மீதும் பற்றுக் கொண்டிருந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை இவர் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதுவே இவர் முழுநேர தேசிய விடுதலைப் போராட்ட வீரராக மாறக் காரணமாக அமைந்தது. உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய போராட்டங்களில் பங்கேற்றார். ஆறு முறை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைக்குப் பின்னர் தமிழகத்தின் இரண்டாவது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வியின் அவசியம் அறிந்த காமராசர் அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் நலன் கருதி, ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு ஆரம்ப பள்ளி, ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளிகளை உருவாக்கினார் .உணவிற்கே வழியில்லாத சூழலில் கல்வி எங்கே கற்பது என்ற நிலை ஏற்படாதிருக்க மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜாதி வேற்றுமைகளை ஏட்டளவில் எதிர்க்கும் கட்சிகளுக்கு மத்தியில் மாணவர்களிடையே விழிப்புணர்வினைத் தூண்டிட இலவச சீருடையை வழங்கினார்.

25 சதவீத மானியத்துடன் விவசாயக்கடன் திட்டம், மாதாந்திர தவணையில் சிறு குறு விவசாயிகளுக்கு மின் பம்பு செட்கள், தமிழகமெங்கும் 1,628 தண்ணீர் தொட்டிகள், 3,000 கிணறுகள் அமைத்தார். எதற்கு இந்த பகுதியில் தேவையில்லாமல் ஒரு அணை என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு நான்கு மாடுகள் இந்த நீர் தேக்கத்தில் தண்ணீர் குடித்து விட்டு போகட்டுமே என்று மிடுக்காக பதிலளித்து இவர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் தான் இன்று பல மாவட்டங்களின் பாசனத்திற்கு அடிப்படை. ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.சி.எப் சென்னை, மணலி ரிபைனரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்(BHEL) முதலிய பல தொழிற்சாலைகள் இவர் ஆட்சியில் தொடங்கப்பட்டவையே.

1963ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். கட்சி கொள்கைப் பாதையிலிருந்து தவறுவதை உணர்ந்த காமராஜர் காந்தி ஜெயந்தி அன்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார். கட்சியின் மூத்த தொண்டர்களையும் பதவி விலகச் சொன்னார். பாரதம் முழுவதும் 6 மத்திய அமைச்சர்களும் 6 முதலமைச்சர்களும் இவர் கூற்றுக்கிணங்க பதவி விலகினர்.

இவர் ஆளுமையையும் தன்னலமற்றக் கொள்கையைக் கண்டும் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேருவின் மறைவிற்கு பின்னர் இவரை பிரதமராக பதவியேற்க மூத்தத் தலைவர்கள் அறிவுறுத்தினர். அதனை கண்ணியமாக மறுத்தார் காமராஜர். லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கிய கிங் மேக்கரான இந்த பெருந்தலைவர், இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிரிந்த மறு தேர்தலிலேயே தோற்கடிக்கப்பட்டார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்றுக் கொண்ட காமராஜர்1975ல் காந்தி ஜெயந்தி அன்று இறைவனடி சேர்ந்தார்.

Dr. பிரவீன் ராஜ்குமார்