சட்டங்கள் விரைவில் திருத்தப்படும்

குஜராத்தில் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர், ‘போலீசார் மீது இரண்டு குறைகள் கூறப்படுவது வழக்கம். ஒன்று, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, மற்றொன்று வரம்புக்கு மீறி செயல்படுகின்றனர் என்பது. காவலர்கள் நியாயமாக செயல்பட, குற்ற விசாரணையில் சரியான சாட்சிகள் வேண்டும். அறிவியல்பூர்வமாக இதை நாம் அணுக வேண்டும். மூன்றாம் நிலை சித்ரவதைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். இதற்கேற்ப, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதனை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு மேல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்றங்களில், தடய அறிவியல் விசாரணையை கட்டாயமாக்க வேண்டும். அறிவியல்பூர்வமான விசாரணையின் வாயிலாக எந்த குற்றத்திலும் சரியான, நியாயமான சாட்சிகள், ஆதாரங்கள் கிடைக்கும்’ என அவர் பேசினார்.