கியூபாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியும், நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை, உணவு பஞ்சம், பிற தேவைகளின் பயங்கர பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சரிசெய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், கம்யூனிச சர்வாதிகாரம் வேண்டாம், மக்களாட்சி வேண்டும் என்றும் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் தூண்டுதலின் பெயரில் இந்த போராட்டம் நடந்து வருவதாக கியூபா அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், போராட்டக்காரர்களை அடக்க, அடக்குமுறையை கையாண்டு வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தனது டுவிட்டரில், “கியூபாவில் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது, மக்கள் மீதான எந்தவொரு வன்முறையையும், அமைதியான போராட்டக்காரர்களை குறிவைத்து நடத்தப்படும் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.