மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். மேலும், தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை இந்த முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், “நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசின் தெளிவான முடிவு அதன் பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். எனினும் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக இருக்கவேண்டும்” என்றார்.