கடலுார், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு எதிரில் சுமார் 3,400 சதுர மீட்டர் பரப்பளவில் திருக்குளம் உள்ளது. இக்குளம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018ல், குளத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. எனினும், வடக்குப் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுக்கு கோரிக்கை: இதுபோல பல்வேறு கோயில்களின் குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சில கோயில் குளங்களுக்கு மழைநீர் வரமுடியாத வண்ணம் சுற்றிலும் கடைகள், வீடுகள் என ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், மழைக் காலத்திலும்கூட அவை வரண்டுள்ளன. இதன் காரணமாக, கோயில் மற்றும் சுற்றுப்புற நீராதாரங்களும் அதள பாதாளாத்துக்கு சென்றுவிட்டன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் கோயில் நில ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வித ஆக்கிரமிப்புகள் நீர் நிலை மற்றும் கோயில் நில ஆக்கிரமிப்பு என ஒன்று சேர்ந்த ஆக்கிரமிப்பு என்பதால் இதில் அறநிலையத்துறையும் தமிழக அரசும் உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மழைக்காலத்துக்கு முன்பு இது போன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் மழைநீரை தேக்கி மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்க முடியும். (தொடர்மழையிலும் நிரம்பாத புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் தெப்பக்குளம்).