எளிமை தினம்

எளிமையின் வாழ்க்கையை ஆதரிக்கும் ஹென்றி டேவிட் தோரூ ஹென்றி டேவிட் தோரே 1817 ஜூலை 12ல் பிறந்தார். அவரை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில், ஆண்டுதோறும் ஜூலை 12ம் தேதி தேசிய எளிமை தினம் கொண்டாடப்படுகிறது.

ஹென்றி டேவிட் தோரே ஒரு அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தத்துவவாதி, இயற்கை ஆர்வலர், கவிஞர், வரலாற்றாசிரியர், சர்வேயர் மற்றும் ஒரு ஆழ்நிலை நிபுணர். அவர் எழுதிய வால்டன் என்ற புத்தகத்திற்காக பிரபலமானவர்.

ஹென்றி டேவிட் தோரே, ஒரு நில உரிமையாளரின் அனுமதியுடன் இரண்டு ஆண்டுகளில் அவரே அங்கு தனது சொந்த அறையை கட்டியெழுப்பினார். உணவிற்காக காய்கறிகளை பயிரிட்டார். அருகில் உள்ள காடுகளில் இயற்கையாக ஒரு எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். இயற்கையிலிருந்து பல அனுபவங்களைப் பெற்றார். இந்த அனுபவங்கள் அவர் வால்டன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பாரதத்தில் உள்ள நமது முன்னோர்கள், ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ ’சிறுதுளி பெரு வெள்ளம்’ என எப்போதோ கூறிவிட்டனர்.

வாழ்க்கையை எளிமையாக வாழ ஒரு சில குறிப்புகள்:

நவீன தொழில்நுட்பம், தேவையற்ற மன அழுத்தத்திலிருந்து சற்றே விலகி, வாழ்க்கையை ஒரு எளிய வழியில் அனுபவிக்க முயற்சிப்போம். தேவை இல்லாமல் வாழ்க்கையை சிக்கலாக்க வேண்டாம். பிஸியான வாழ்க்கைமுறையில் இருந்து சற்றே விலகி, வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்கான வழிகளைப் ஆராய்வோம். தேவையற்ற சுமைகளை மனதிலும் வீட்டிலும் வாழ்க்கையிலும் இருந்து இனியும் சுமக்க வேண்டாம். அவற்றை தூர எறிவோம். நாம் நம் வாழ்க்கையை எளிமைப்படுத்தும்போது, ​​பிரபஞ்ச விதிகளும் நமக்கு எளிமையாக மாறும்.

எதற்காகவும் வாழ்க்கையை சிக்கலாக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் கண்டிப்பாக தீர்வு உள்ளது. வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளில் மட்டும் கவனம் செலுத்துவோம். அடுத்தவரை பார்த்து பொறாமைப் படுவதை நிறுத்திடுவோம். நமது மனதும் வீடும் எளிமையாக இருக்கட்டும். எது முக்கியமானது என்பதில் தெளிவு பெறுவோம். முடிந்தவரை தொழில்நுட்பத்திலிருந்து விலகி வாழ  பழகிக் கொள்வோம். ஏனெனில் மற்ற சுமைகளைவிட தகவல்சுமைதான் தற்போது அனைவருக்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

 

நந்தனா சதீஷ் – கலிபோர்னியா, அமெரிக்கா