அமெரிக்கர்கள் நம்பும் கொரோனா பரவல்

சீனாவில் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் கசிந்ததைக் குறிக்கும் பல சான்றுகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சீனா அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழுவை அது ஆய்வகத்தில் அனுமதிக்கவில்லை.  இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக, அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை நடத்தியது. இதில், 52 சதவீதம் பேர் சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியிருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தனர். சிறிது காலம் முன்புவரை, இந்த கோட்பாடு வலதுசாரிகளின் திணிப்பு என கருதப்பட்டது. ஆனால், தற்போது குறிப்பிடத்தக்க வகையில், சம எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் இந்த கோட்பாட்டை நம்புகிறார்கள். முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்ற ஜி 7 நாடுகள் உச்சி மாநாட்டில், வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையில் பங்கேற்க சீனாவுக்கு அந்த நாடுகள் அழைப்பு விடுத்தன என்பதும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அமெரிக்க உளவுத்துறை இது குறித்து விசாரித்து ஒரு விரிவான அறிக்கையை அடுத்த மாத இறுதிக்குள் அவரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.