நெப்போலியனின் நகைச்சுவை

பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவர். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவரது எண்ணம். போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த வீரன் நெப்போலியன். ஆனால், ஓரிரு செட் ஆடைகள், இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு, அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை என அவரது சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கனமானது. சுறுசுறுப்பாக இருக்கும் அவரின் சின்னம் தேனீ.

நெப்போலியன் போரில் தோற்ற சமயம் அது, அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில் இருந்து தப்புவதற்காக, ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். “என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!” என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார். ரஷ்ய படைகள் நெப்போலியனைத் தேடி வந்தன. துணி மூட்டைக்குள் கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்போலியன் தப்பிவிட்டார். அதற்கு பின் நெப்போலியனை காக்க பிரெஞ்சு படைகள் வந்தன. சொன்னபடியே, வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன்.

“முதலில் கடையின் ஓடுகளை சரி செய்ய வேண்டும்”. “சரி, முடிந்தது” என்றார் நெப்போலியன். “அடுத்து” என கேட்க, “எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள், ஒரே தொழில் போட்டி” என்றான் கடைக்காரன். சிரித்துக்கொண்டே, “சரி! அடுத்து?” என்றார். “நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தியபோது எப்படி உணர்ந்தீர்கள்” என்றான் தையல் கடைக்காரன்.

“ஹ்ம்ம்” என்ற நெப்போலியன், “கிளம்புங்கள்!” என படைகளிடம் சொல்லிவிட்டு, வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, ஒரு படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் துப்பாக்கியை வைக்கச்சொல்லி, ஒன்று இரண்டு மூன்று என்றதும் இவனை சுட்டுவிடு என்றார். துப்பாக்கி, தையல்காரன் தலையில் வைக்கப்பட்டது. “ஒன்று… இரண்டு…. மூன்று!” என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை. வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து “இப்படிதான் இருந்தது எனக்கு!” என்று சொல்லிவிட்டுவிட்டு கிளம்பினார் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் நெப்போலியனிடம் இருந்தது.

மைதிலி சீனு