டெலிமார்க்கெட்டிங் தொல்லைக்கு முடிவு

நமது அலைபேசியில் அன்றாடம் நாம் சந்திக்கும் தொல்லைகளில் ஒன்று  நேரம் காலமில்லாத டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள். இதற்கு கடிவாளம் போடும் ஒரு நல்ல முயற்சியில் இறங்கியுள்ளது தொலைதொடர்புத் துறை. அதன்படி, டெலிமார்க்கெட்டிங்க் நிறுவனங்களின் ஒவ்வொரு அழைப்புக்கும், ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 10 தடவை விதிமீறல்களுக்கு ரூ. 1,000 அபராதமும், 10 முதல் 50 விதிமீறல்களுக்கு ரூ. 5 ஆயிரம், 50க்கும் மேற்பட்ட விதிமீறல்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தானியங்கி முறையில் இந்த அழைப்பாளர்களின் சாதனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதில் சந்தேகம் இருந்தால், மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். விதிமுறை மீறல்கள் தொடர்ந்தால், அவர்களுக்கு அனைத்து தொலைதொடர்பு இணைப்புகள் வழங்க இரண்டு வருட தடை விதிக்கப்படும்.