விளம்பரத்திற்கு 155 கோடி

மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ஆணையம், சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசு 2019 டிசம்பர் 11 முதல் 2021 மார்ச் 12 வரை விளம்பரத்திற்காக 155 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ. 9.6 கோடி விளம்பர பிரச்சாரங்களுக்கு செலவிட்டுள்ளது. 16 மாதங்களில் சமூக ஊடகங்களுக்கு மட்டும் சுமார் 5.99 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இதில் சமூக ஊடக செலவு, படைப்பாளிகளுக்கான செலவினம் என்ற தகவல்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆணையம் வழங்கியதை விட விளம்பர செலவுகள் அதிகமாக இருக்கலாம்’ என அனில் கல்காலி சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, ‘எங்கள் பதவிக்காலத்தில், விளம்பரத்திற்காக ரூ. 26 கோடி மட்டுமே செலவிட்டோம். ஆனால், தற்போதைய அரசு விளம்பரத்திற்காக ரூ. 246 கோடியை செலவிடுட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதில் முறையான விசாரணை தேவை. கொரோனா காலத்தில், வருவாய் குறைந்துள்ள நேரத்தில் விளம்பரத்திற்காக இவ்வளவு செலவு செய்ய என்ன தேவை? ‘ என பா.ஜ.க தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி கேட்டுள்ளார்.