ராஜீவ் சர்மா மீண்டும் கைது

கடந்த ஆண்டு சீனாவுக்கு உளவு பார்த்ததாக டெல்லி காவல்துறையினர் ராஜீவ் சர்மாவை கைது செய்தது. அவருடன் நெருக்கமாக இருந்த சீன பெண், நேபாள இளைஞர் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா பல்வேறு நாளேடுகளிலும் பணியாற்றிய அனுபவமுடையவர். இவர் பிறகு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக பல்வேறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். சீனாவின் ‘தி குளோபல் டைம்ஸ்’ நாளேட்டிலும் அதிகமாக எழுதி வந்தார். இவர், இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ஒவ்வொரு தகவலுக்கும் ஆயிரம் அமெரிக்க டாலரை சீனாவிடம் இருந்து பெற்றுள்ளார். அவ்வகையில் அவர், ரூ. 40 லட்சம் பெற்றுள்ளார். அவரிடம் இருந்த பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவர் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டுவரை இந்தியாவின் பல்வேறு பாதுகாப்புத் தகவல்ளை சீனாவுக்கு தெரிவித்தது விசாரனையில் தெரியவந்தது. சீன உளவுத்துறையினரும், சர்மாவும் பாரதம் உட்பட பல்வேறு நாடுகளில் சந்தித்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று ராஜீவ் சர்மா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு உளவு பார்த்ததால் அவருக்கு ஹவாலா முறையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பினாமி வங்கி கணக்கு மூலம் ராஜீவ் சர்மா பெற்று வந்திருக்கிறார். இதனையடுத்து ராஜீவ் சர்மா, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.