அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம்’ என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க ஆட்சியாளர்களின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், அ.தி.மு.க அரசினை தரக் குறைவாக விமர்சித்ததற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார் ஸ்டாலின். ஆனால், சுமார் 120 அ.தி.மு.க உறுப்பினர்களிடம், சமூக வலைதளங்களில் பதிவிட்ட உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று மிரட்டி வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக குறித்து சமூக வலைதளங்களில் பதியப்பட்ட கருத்துக்களுக்காக இப்போது வழக்கு போடப்படுகிறது. ஒரு தனியார் நிறுவன செய்தி தொலைகாட்சி உட்பட, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றாரை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது கருத்து சுதந்திரம். அதுவே தங்களை நாகரீகமாக விமர்சித்தாலே, அது பெரிய குற்றம் என கருதி காவல்துறையினரை ஏவி வழக்கு தொடுப்பது, கட்சியினரை விட்டு மிரட்டுவது போன்ற திமுகவினருக்கே உரித்தான செயல்களைப் பார்க்கும்போது, தி.மு.கவினர் இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் நாட்டம் செலுத்திவரும் திமுக அரசு, மக்கள் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.